Published : 02 May 2021 02:43 PM
Last Updated : 02 May 2021 02:43 PM
பாஜகவின் வெறுப்புஅரசியல் நிலைப்பாடு வீழ்த்தப்பட்டுள்ளது என்று மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், பிடிபி கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 202 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது, பாஜக 78 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
மிகப்ெபரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதிக் கட்சியி்ன் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் மம்தா பானர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் “ மேவங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய, மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள். தி ஓ தீதி(சகோதரி ஓய் சகோதரி என மோடி பேசினார்) என்று கிண்டலாகப் பேசிய பாஜகவுக்கு இந்த வெற்றி தகுந்த பதிலடி” எனத் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ட்வி்ட்டரில் பதிவிட்ட வாழ்த்துச்செய்தியில் “ உங்களின் மிகச்சிறப்பான தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள் மம்தா பானர்ஜி. இனிமேல் மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம், கரோனா தொற்றை சேர்ந்து எதிர்த்து போரிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “ மிகஅற்புதமான வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், மம்தா பானர்ஜி, டேரீக் ஓ பிரையன் எம்பி ஆகியோருக்கு வாழ்த்துகள். அழிவு சக்திகளையும், பிரிவினைவாத சக்திகளையும் மே.வங்க மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT