Published : 02 May 2021 02:14 PM
Last Updated : 02 May 2021 02:14 PM
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் பி.ஏ.முகமது ரியாஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலையிலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 98 தொகுதிகளில் முன்னிலை பெற்று மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தொடக்கத்தில் கடும் போட்டியளித்த நிலையில் பலமாவட்டங்களில் கடும் சரிவைச் சந்தித்து 41 தொகுதிகளில்தான் முன்னிலையுடன் நகர்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 சுற்றுகளின் முடிவில் திருச்சூர், நீமம், பாலக்காடு தொகுதியில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின்தங்கியுள்ளது. நீமம் தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் பின்தங்கியுள்ளார், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிவன்குட்டி 2,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி பின்தங்கியுள்ளார். பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட மெட்ரோமென் ஸ்ரீதரன் மட்டும் முன்னிலையுடன் உள்ளார். திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேந்திரனும் பின்தங்கியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(டிஒய்எப்ஐ) தேசியத் தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் கோழிக்கோடு மாவட்டம் பேபூர் தொகுதியில் போட்டியிட்டார்.
முதல்வர் பினராயி விஜயனின் மருமகனான முகமது ரியாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேபிசிசி பொதுச்செயலாளர் நியாஸைவிட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT