Last Updated : 02 May, 2021 03:13 AM

 

Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

துப்பாக்கிச் சுடும் வீராங்கனை சந்திரோ தோமர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு: பாலிவுட் நடிகர் அமீர்கான் புகழஞ்சலி

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற பல கிராமத்து பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் அதன் ஜோஹரி கிராமத்தை சேர்ந்த சந்திரோ தோமர். ‘ஷூட்டர் தாதி (துப்பாக்கி சுடும் வீரப்பாட்டி)’, ‘ரிவால்வர் தாதி’ எனவும் அழைக்கப்பட்டவர், நேற்றுமுன்தினம் கரோனாவிற்கு பலியாகி விட்டார். மீரட்டின் மருத்துவக் கல்லூரியில் சந்திரோ தோமர், கடந்த திங்கள் கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது குடும்பத்தில் அதிகம் இருந்ததாகக் கருதப்படும் ஆணாதிக்கத்தை மீறி தன் 60 வயதில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றவர் சந்திரோ தோமர். இதற்காக அவரது மருமகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் ஆதரவளித்திருந்தனர். இவரது நாத்தனாரான பிரகாஷி தோமரும் ஒரு மூத்த துப்பாக்கி சுடும் வீராங்கணை ஆவார். குடியரசு தலைவர் உள்ளிட்ட மாநில, தேசிய விருதுகளை வென்றவர். சந்திரோவின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டிலும் சாண்ட் கி ஆன்க்’ எனும் பெயரில் கடந்த 2019ல் படமானது.

சந்திரோ தோமரை பாலிவுட் நடிகர் அமீர்கான் தொலைக் காட்சியில் நடத்திய சத்யமேவ ஜெயதே எனும் நிகழ்ச்சிக்கு 2012ல் அழைத்து கவுரவித்திருந்தார். இதில், சந்திரோவின் திறமையால் மிகவும் கவரப்பட்டவர், அவருக்குதனது புகழஞ்சலியை செலுத்தியுள்ளார் அமீர்கான்.

இதற்காக, அமீர்கானின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சந்திரோ தோமரின் மறைவிற்கு அவரது குடும்பத் தாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி. தனது ஓய்வு பெறும் வயதில் மீண்டும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை தேர்வு செய்து புத்துயிர் வாழ்க்கை பெற்றவர். இதனால், எக்காலத்திலும் அவர் அனைவரது மனங்களிலும் நிறைந்து ஒரு முன் உதாரணமாகத் திகழ்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற சந்திரோ தோமர் சர்வதேச துப்பாகி சுடும் வீராங்கனையாகவும் கருதப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x