Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM
கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுடன் சேர்த்து உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலும் நடைபெற்றது.
கடைசியாக இதன் 4-வதுகட்ட தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. உத்தர பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட இறப்பும், பாதிப்பும் மிக அதிகமாக இருக்க பஞ்சாயத்து தேர்தலும் ஒரு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. தேர்தல் பணியிலிருந்த பல ஆசிரியர்களும் கரோனாவிற்கு பலியாகினர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் வாக்கு எண்ணும் பணியை ஏற்க உத்தரபிரதேசத்தின் பல்வேறு பள்ளிகளில்பணியும் 706 ஆசிரியர்கள் மறுத்துள்ளனர். இதை குறிப்பிட்டு ஆசிரியர்கள் சங்கத்தினர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மாநிலப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் தினேஷ் சந்திர சர்மா கூறும்போது, ‘ஏப்ரல் 12-ல் தேர்தல் துவங்கியது முதல் கரோனா பரவல் மீதான பாதுகாப்பை தேர்தல் ஆணையம் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை.
இதன் காரணமாக 577 ஆசிரியர்கள் தொற்றால் பலியாகினர். ஏற்கெனவே தொற்றால் சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு மீண்டும் பணி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை பெயர்களுடன் குறிப்பிட்டு வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதியுள்ளோம். இதை ஆணையம் செய்யாவிட்டால் 706 ஆசிரியர்கள் தேர்தல் பணியை புறக்கணிக்கத் தயார்’ என்றார்.
ஆசிரியர்கள் எழுதியுள்ள கடிதத்தில், கரோனாவால் பலியான ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும்படியும் கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஆதித்யநாத்திற்கும் பல ஆசிரியர் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன. இச்சூழலில் பஞ்சாயத்து தேர்தலில் ஆசிரியர்கள் பலியான விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.
முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் சிங்கும், காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ராவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பலியான ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை உத்தரபிரதேச அரசு அளிக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT