Last Updated : 30 Apr, 2021 04:49 PM

7  

Published : 30 Apr 2021 04:49 PM
Last Updated : 30 Apr 2021 04:49 PM

உ.பி. மருத்துவமனைகளில் தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: மறுக்கும் முதல்வர் யோகி; புரளியை கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு

புதுடெல்லி

உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்கிறது. இதை மறுக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுபோல் புரளியை கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலமான உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என முதல்வர் யோகி மறுத்து வருகிறார். இருப்பினும், பல்வேறு தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மீது தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.

தம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காதமையால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியானதாக மீரட்டின் கே.எம்.சி மருத்துவமனை நேற்று புகார் கூறியது. அன்றாடம் தேவையான 300 சிலிண்டர்களுக்கு பதிலாக வெறும் 100 கிடைப்பதாக அதன் உரிமையாளர் டாக்டர்.சுனில் குப்தா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் கேட்டு அம்மருத்துவமனைக்கு உ.பி. அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அம்மருத்துவமனையின் அரசு அனுமதியை ரத்து செய்து விடுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளிக்க மூன்று தினங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பல மருத்துவமனையினர் அமைதி காத்தாலும் புகார்கள் எழுவதை தடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்த ஆக்சிஜன் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்களும் சமூகவலைதளங்களில் அதற்காகக் கோரிக்கை விடுத்தப்படு உள்ளனர். இவர்களில் சிலர் மீது நடவடிக்கை எடுக்க உபி அரசு முனைந்துள்ளது.

இதனால், உ.பி. அரசின் இந்த தவறான நடவடிக்கைகளை கண்டித்தும், அதில் சிக்குபவர்களை காக்கக் கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை உ.பி.யின் பிரபல சமூகசேவகரான சாக்கேத் கோகலே தொடுத்துள்ளார்.

இதனிடையே, கான்பூரில் மருத்துவமனையில் படுக்கைகள் கூடக் கிடைக்காமல் நோயாளிகள் திரும்புவதும் நிலவுகிறது. இவர்களது கைப்பேசி எண்களை அவர்கள் பதிவு செய்த மருத்துவமனைகளில் பெற்று இடைத்தரகர்கள் போன் செய்கின்றனர்.

இதில், ரூ.50 அல்லது 60 ஆயிரம் கூடுதலாகக் கொடுத்தால் சிகிச்சைக்கானப் படுக்கைகள் ஒதுக்கி தருவாதத் தகவல் கிடைக்கிறது. இதன் மீதும் கான்பூரில் புகார்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x