Published : 30 Apr 2021 03:55 PM
Last Updated : 30 Apr 2021 03:55 PM
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை 4.50 லட்சம் டோஸ்களை மத்தியஅரசு இறக்குமதி செய்ய உள்ளது.
முதல்கட்டமாக 75 ஆயிரம் டோஸ் மருந்துகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வந்துவிடும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு தீவிரத்தை குறைக்கும் வகையில் ரெம்டெசிவிர் நோய் எதிர்பாற்றல் மருந்து அளிக்கப்படுகிறது. ஆனால், பல மாநிலங்களில் இந்த ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடும், பல வியாபாரிகள் இந்த மருந்தைப் பதுக்கி கள்ளச்சந்தையில் கூடுதல்விலைக்கு விற்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து 4.50 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்தை மத்தியஅரசு இறக்குமதி செய்ய உள்ளது. இதில் 75 ஆயிரம் டோஸ் மருந்துகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தியா வந்துவிடும்.
அமெரிக்காவின ஜிலீட் சயின்ஸஸ், எகிப்தியன் பார்மா கம்பெனி, இவிஏ பார்மா ஆகியவற்றிலிருந்து 4.50 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் ஜிலீட் சயின்ஸஸ் நிறுவனம் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான மருந்துகளை அடுத்த இரு நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். அடுத்த ஒரு லட்சம் டோஸ் மருந்துகளை மே 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க உள்ளது.
இவிஏ பார்மா 10ஆயிரம் டோஸ் மருந்துகளை தொடக்கத்திலும், அதன்பின் ஜூலை வரை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை 50 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகளும் அனுப்பி வைக்கும்.
மேலும் இந்தியாவிலும் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 21-ம் தேதி முதல் 28ம் தேதிவரை 13.73 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT