Published : 30 Apr 2021 01:26 PM
Last Updated : 30 Apr 2021 01:26 PM

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் தொடங்குவதில் தாமதம்?

பிரதிநிதித்துவப்படம் : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

தமிழகம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குமா, அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கையிருப்பு இருக்கும் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மட்டுமே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மே 1-ம் தேதி திட்டமிட்டபடி பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாரஷ்டிரா அரசு சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பில், “ தற்போது கைவசம் 25 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால், 3-ம் கட்ட தடுப்பூசி முகாமான 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் மே 1-ம் தேதி தொடங்கப்படாது. தடுப்பூசி தட்டுப்பாடு முடிந்தபின், படிப்படியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதால், மே 1-ம் தேதி 18 வயதினருக்கு மேற்பட்டபிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தாமதமாகும் எனத் தெரிகிறது

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் “ 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே 1-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது. தற்போது கையிருப்பில் குறைவான அளவே தடுப்பூசி இருப்பதால், அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுகிறது. தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லை. மே 3-ம் தேதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என நம்புகிறோம். மக்கள் பொறுமை காக்க வேண்டும், பதற்றம் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி சப்ளை போதுமான அளவில் இல்லை, தட்டுப்பாடு இருப்பதால், மே 1-ம் தேதி திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்காது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அளித்த பேட்டியில், “ தடுப்பூசி போதுமான அளவில் கிடைத்தபின்பு தான் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மே1-ம் தேதி தொடங்கப்படாமல் அதற்கு பதிலாக மே 15-ம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஆந்திரப்பிரதேசத்திலும், தெலங்கானா மாநிலத்திலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால், மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளன. மருந்து நிறுவனங்களிடம் அளித்த ஆர்டர் இன்னும் வந்து சேரவில்லை எனத் தெரிவித்துள்ளன.

இதேபோல பிஹார், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், திட்டமிட்டபடி மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளன. சீரம் நிறுவனம், பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட தடுப்பூசி ஆர்டர்கள் மே 15-ம் தேதிக்குப்பின்புதான் வரும் எனத் தெரிவித்துள்ளன.

இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மே 1-ம் தேதி பல்வேறு மாநிலங்களில் தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x