Published : 29 Apr 2021 03:02 PM
Last Updated : 29 Apr 2021 03:02 PM
மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம். மத்திய அரசு கரோனாவுக்கு எதிராகப் போராடுகிறது; காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைப் போல் மோசமான அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் வரிப்பணம் மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கக் கொடுக்கப்பட்டது. இப்போது அரசாங்கம் அதே மக்களை தடுப்பூசி மருந்துகளுக்கு உலகிலேயே அதிக விலை கொடுக்க வைக்கிறது. மீண்டும் சிஸ்டம் தோல்வியடைந்துவிட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். மோடியின் தோழர்களுக்கு லாபம்" என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் பேசியுள்ள மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி, "மிகக் கொடிய பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அரசியல் செய்வதற்கு இது சரியான நேரமல்ல. கரோனாவை எதிர்த்து இரவுபகலாகப் போராடி வருகிறோம். காங்கிரஸைப் போல் மோசமான அரசியல் செய்யவில்லை.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த ஓராண்டாக கடுமையாகப் போராடி சாதனைகள் புரிந்துள்ளது. சாமான்ய மக்களின் நலன் காக்க இன்றும் இரவு பகல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
முன்பாவது வெண்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், பிபிஇ கிட்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. இப்போது இவற்றில் எல்லாம் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
ஆனால் காங்கிரஸ் மோசமான அரசியல் செய்கிறது. முன்னதாக இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் எழுப்பி குழப்பம் விளைவித்தனர். ஆனால் அந்த தடுப்பு மருந்துகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டதால் இப்போது அவற்றின் விலை பற்றி பேசுகின்றன. மக்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது அரசியல் செய்ய வேண்டாம் என காங்கிரஸை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை சரமாரியாகக் கேள்விகளால் துளைத்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT