Published : 13 Dec 2015 12:53 PM
Last Updated : 13 Dec 2015 12:53 PM
நாட்டில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதை தென்னிந்திய மாநில அரசுகள் சவாலாக ஏற்று செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் நேற்று ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மாநில அரசுகளுக்கான 26-வது தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு, ஆந்திரா-தெலங்கானா இடையேயான மின் விநியோக பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, செம்மர கடத்தலை தடுப்பது, வெள்ள பாதிப்பு மற்றும் சில மாநிலங்களுக்கிடையே உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது:
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் லட்சியம். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு கண்டிப்பாக உதவி செய்யும். மக்களின் நலனிலும் மாநில வளர்ச்சியிலும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கைகோத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும். அதே சமயத்தில் மத்திய அரசுடன் சில மாநில அரசுகளுக்கு உள்ள பிரச்சினைகளையும் அலசி பார்க்க இதுவே சரியான சமயமாகும்.
மாவோயிஸ்ட்டுகள், தீவிர வாதம், நக்சலைட்டுகளை முற்றி லும் ஒழிக்க அந்தந்த மாநில அரசுகள் எல்லைகளை பலப்படுத்துவது அவசியம். இதனை ஒரு சவாலாக ஏற்று தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இக்கூட்டத்தில் தென்னிந்திய மாநில மீனவர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அமல்படுத்துவதின் மூலம் மீனவர்கள் மற்ற எந்த மாநிலத்திற்கும் சென்று மீன் பிடிக்கும் அனுமதி வழங்கப்படும். அடிப்படை வசதிக்கான நிதிகள் பெறுவதில் தென்னிந்திய மாநிலங் களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென அனைத்து மாநில பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்த னர். இதேபோன்று ஏழ்மையை ஒழிக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான பாரா மெடிக்கல், நர்சிங் கல்வி முறையை அமல்படுத்த விரைவில் கமிட்டி அமைக்கப்பட்டு பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. போலீஸ் துறையை மேம்படுத்தவும் கமிட்டி அமைக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் சின்ன ராஜப்பா, தெலங்கானா உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி, தமிழக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், கேரள அமைச்சர் ஜோசப், கர்நாடக அமைச்சர் பரமேஷ்வர், புதுச்சேரி ஆளுநர் மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள், மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT