Published : 28 Apr 2021 06:50 PM
Last Updated : 28 Apr 2021 06:50 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரும் மே 1-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அதை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த முடிவை மாநில அமைச்சரவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மகாராஷ்டிர அரசு எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
நாட்டிலேயே கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,358 பேர் பாதிக்கப்பட்டனர். 895 பேர் உயிரிழந்தனர். மும்பையில் மட்டும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 59 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த 15 நாட்களுக்கு முன் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்தது. இதில் அத்தியாவசியப் பணிக்குச் செல்வோர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசின் குறிப்பிட்ட பிரிவு அலுவலர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த லாக்டவுன் வரும் மே 1-ம் தேதியோடு முடிகிறது. கடந்த 15 நாட்களாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் மாநிலத்தில் கரோனா தொற்று குறையவில்லை, எதிர்பார்த்த முன்னேற்றமும் இல்லை.
இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தில் ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பது குறித்துப் பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டம் முடிந்ததும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா தொற்று குறையவில்லை, கரோனா சங்கிலியை உடைக்க, லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
ஆதலால், அடுத்த 15 நாட்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படலாம். ஆனால், எத்தனை நாட்கள் என்பது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான முடிவு வரும் 30-ம் தேதி மீண்டும் ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்று ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT