Published : 28 Apr 2021 12:55 PM
Last Updated : 28 Apr 2021 12:55 PM

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட இன்று முதல் முன்பதிவு: கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இன்று முதல் (28-ம் தேதி) கோ-வின் போர்டல், ஆரோக்கிய சேது, உமாங் (UMANG app) செயலியில் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்டுவார்கள். அந்தச் செயலியில் எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

கோ-வின் போர்டலில் பதிவு செய்வது எவ்வாறு?

  • கோ-வின் போர்டலுக்குச் சென்று, கரோனா தடுப்பூசி முன்பதிவு தளத்தில் சென்று உங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் எண் கொடுத்தபின், “கெட் ஓடிபி” என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஓடிபி எண் வந்தவுடன் அதைப் பதிவு செய்து வெரிஃபை என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
  • உங்கள் விவரங்களைச் சரிபார்த்தபின், கரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்யும் பக்கம் திறக்கும்.
  • அந்தப் பக்கத்தில், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் எண், பான்கார்டு எண், பாஸ்போர்ட் எண், பென்ஷன் பாஸ்புக் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் அடையாள எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
  • அதன்பின் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
  • அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டபின், உங்கள் விவரங்கள் அடங்கிய பக்கம் உருவாகி, எப்போது தடுப்பூசி செலுத்தச் செல்ல வேண்டும் என்பது குறித்த விவரங்கள் வரும்.

ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?

  • மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலி இல்லாவிட்டால் முதலில் அதை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்தபின் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
  • அதன்பின் தடுப்பூசி என்ற (வேக்ஸினேஷன்) பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்
  • அதில் கேட்கப்பட்டுள்ள உங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

செய்யக்கூடியவை

  • முன்பதிவு செய்தபின், உங்களின் தடுப்பூசி செலுத்தும் நாளை முடிவு செய்யுங்கள்.
  • கோ-வின் போர்டல், ஆரோக்கிய சேது செயலி, உமாங் ஆகியவை மூலம் முன்பதிவு செய்யலாம்.
  • ஒருவர் ஒரு செல்போன் எண் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தும்போது, அடையாள அட்டை ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும்.
  • தடுப்பூசி முன்பதிவு செய்யும்போது, உங்கள் வீட்டுக்கு அருகே அல்லது அலுவலகத்துக்கு அருகே இருக்கும் தடுப்பூசி மையத்தைத் தேடி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தியபின் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்.
  • தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தேதி, குறிப்பிட்ட நேரத்துக்கு தாமதமில்லாமல் செல்ல வேண்டும்.
  • தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் 30 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் ஏதேனும் உடலில் பாதிப்புகள் 30 நிமிடங்களுக்குள் வந்தால், உடனடியாக மருத்துவப் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்த வரும்போது முகக்கவசம் அணிந்துவர வேண்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

  • முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி செலுத்த வரக்கூடாது.
  • ஏதாவது ஒரு போர்டலில் முன்பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஆரோக்கிய சேதுவில் முன்பதிவு செய்துவிட்டு, கோ-வின் போர்டலிலும் முன்பதிவு செய்யக்கூடாது.
  • பல செல்போன் எண்களைப் பதிவு செய்யவோ அல்லது பல அடையாள எண்களையோ பதிவு செய்யக் கூடாது.
  • தடுப்பூசி செலுத்த வரும் அன்று மது அருந்தியிருக்கக் கூடாது.
  • தடுப்பூசி செலுத்திக் கொண்டபின் 30 நிமிடங்களுக்குள் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை.
  • 2-வது டோஸ் தடுப்பூசிக்குத் தனியாக முன்பதிவு செய்யத் தேவையில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x