Last Updated : 27 Apr, 2021 11:12 AM

2  

Published : 27 Apr 2021 11:12 AM
Last Updated : 27 Apr 2021 11:12 AM

மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப்பின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

கோப்புப்படம்

புதுடெல்லி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவி்க்கப்பட்டபின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் விரிவான விவரங்கள விரைவில் வெளியிடுவோம் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 3.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், 2,771 பேர் உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நேரத்திலும் மே. வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மே. வங்கத்தில் 7 கட்டத் தேர்தல் வெற்றிகரமாக முடிந்தநிலையில் 8-வது கட்டம் மட்டும் நடக்க உள்ளது.

இதற்கிடையே தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கரோனா தடுப்பு விதிகளை தேர்தல் ஆணையம் முறையாகக் கடைபிடிக்கவில்லை, தீவிரமாக அமல்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஓரு வழக்கில் கருத்து தெரிவித்தபோது, “ தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.

கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் முடிந்து வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப்பின் அரசியல் கட்சிகள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடும். அப்போது போலீஸார் குவிக்கப்பட்டாலும் கட்டுப்படுத்துவது எளிதான காரியமாக இருக்காது.

ஆதலால், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே, மே 2-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை, முழுவிவரம் விரைவில் வெளியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x