Published : 26 Apr 2021 04:33 PM
Last Updated : 26 Apr 2021 04:33 PM
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, நாளை இரவு முதல் அடுத்த 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்தார்.
லாக்டவுன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத கர்நாடக அரசு, க்ளோஸ் டவுன் என்று இதை அழைக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,804 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதில் பெங்களூருவில் மட்டும் 20,733 பேர் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் கரோனா தொற்று 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2.62 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் இன்று பெங்களூருவில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. ஏறக்குறைய 3 மணி நேரம் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைகள், ஆலோசனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு 14 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:
''கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைப்படி நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு க்ளோஸ் டவுன் செய்யப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும். பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை. உற்பத்தித் துறை, வேளாண்மை, கட்டுமானத்துறை, மருத்துவம், அத்தியாவசியப் பணிகள் ஆகியவற்றுக்குத் தடையில்லை.
ஆயத்த ஆடைகள், ஆடை தயாரிப்புத் தொழிற்சாலை மட்டும் இயங்க அனுமதியில்லை. கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும்.
அடுத்த 14 நாட்களுக்குப் பின்பும் கரோனா தொற்று குறையாமல் இருந்தால் இந்தக் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்படும். கரோனா தடுப்பூசி 18 வயது முதல் 45 வயது வரை உள்ள மக்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செலுத்தப்படும். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைச் சுகாதாரத்துறை விரைவில் வெளியிடும்.
மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதுமில்லை. தினசரி 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் என்ற அளவிலிருந்து 800 மெட்ரிக் டன் என மத்திய அரசு உயர்த்தியுள்ளது''.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT