Published : 26 Apr 2021 06:51 AM
Last Updated : 26 Apr 2021 06:51 AM
உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு கோவிட் சிகிச்சை ரயில்பெட்டிகளை அனுப்பியது ரயில்வே
கோவிட் 2வது அலைக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருப்பதால், கோவிட் சிகிச்சைக்கான ரயில் பெட்டிகளில் கூடுதல் வசதிகள் செய்து பல மாநிலங்களுக்கு ரயில்வே அனுப்பி வருகிறது.
இவற்றை லேசான அறிகுறியுள்ள கோவிட் நோயாளிகளுக்கு தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடியும். தற்போதைய கோடைக்காலத்தை சமாளிக்க இந்த ரயில் பெட்டிகளில் கூலர்கள், சணல் விரிப்புகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 4000 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் நாட்டின் பல ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில, கோவிட் முதல் அலையின்போது, ஏற்கனவே தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்பட்டன.
கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் கரோனா சிகிச்சை ரயில் பெட்டிகளின் விவரம்:
டெல்லியில் 800 படுக்கைகளுடன் 50 ரயில் பெட்டிகள் சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் உள்ளன. இவற்றில் தற்போது 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
400 படுக்கைகளுடன் 25 ரயில் பெட்டிகள், ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் உள்ளன.
மகாராஷ்டிராவின் நந்துர்பர் ரயில் நிலையத்தில் 378 படுக்கைகளுடன் 21 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 55 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போபால் ரயில் நிலையத்தில், 20 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் செல்ல 50 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. ஜபல்பூர் செல்ல 20 ரயில் பெட்டிகள் தயார்நிலையில் உள்ளன.
மாநில அரசுகளின் கோரிக்கைப்படி, இந்த தனிமை வார்டு ரயில் பெட்டிகள், லேசான மற்றும் மிதமான அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ரயில்பெட்டிகளில் நோயாளிகளுக்கு தேவையானவற்றை வழங்கவும், சுகாதாரத்தை பராமரிக்கவும் ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இந்த தனிமை வார்டு ரயில் பெட்டிகளை மாநில அரசுகள் பயன்படுத்துவது பற்றிய விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT