Published : 25 Apr 2021 01:42 PM
Last Updated : 25 Apr 2021 01:42 PM
நாட்டின் நிர்வாக முறை (சிஸ்டம்) தோல்வி அடைந்துவிட்டதால், அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, மும்பை, அகமதாபாத் , லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “ கரோனா வைரஸ் முதல் அலையை வெற்றிகரமாக கையாண்டு நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 2-ம் அலை நம் தேசத்தை உலுக்கி எடுத்துவிட்டது, இருப்பின் இந்த சிக்கலில் இருந்து விரைவில் மீள்வோம்” எனக்குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “ சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. இந்நேரம் மக்களின் நலனைப் பற்றி பேசுவதுதான் முக்கியமானது.
இந்த சிக்கலான நேரத்தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடிமகன்கள் அவசியம். காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால்,உங்களின் அரசியல் பணியை ஒதுக்கிவைத்து, இந்திய மக்களுக்கு உதவுங்கள், உதவி்க்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் முடிவில் இருந்த ராகுல் காந்தி, நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவல் சூழலைப் பார்த்து, தனது பிரச்சாரப் பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்.
ராகுல் காந்தி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT