Published : 25 Apr 2021 10:15 AM
Last Updated : 25 Apr 2021 10:15 AM
உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கரோனாவில் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம், லக்னோ மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா(76) கரோனாவில் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
அதேபோல அவாரியா சத்தார் தொகுதி பாஜக எம்எல்ஏ ரமேஷ் சந்திர திவாகர்(56) மீரட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களா திவாகர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் நேற்று உயிரிழந்தார். இதில் திவாகர் மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு, தற்போது கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.
பாஜக எம்எல்ஏக்கள் இருவர் கரோனாவில் உயிரிழந்ததற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம்
மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கலாவதி பூரியாவும் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அலிராஜ்பூர் மாவட்டம், ஜோபத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி பூரியாவுக்கு 49 வயதாகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கலாவதி பூரியா, கடந்த 12 நாட்களாக அலிராஜ்பூரில் உள்ள ஷால்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலாவதி பூரியாவும் நேற்று உயிரிழந்தார்.
ஷால்பே மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் விவேக் ஜோஷி கூறுகையில் “ எம்எல்ஏ கலாவதி பூரியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவரின் நுரையீரல் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுவி்ட்டது. கடந்த 10 நாட்களாக வென்டிலேட்டர் சிகி்ச்சையில்தான் இருந்துவந்தார். அவரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தநிலையில் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி பூரியா மறைவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் , முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளி்ட்ட பலஅரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT