Published : 17 Dec 2015 10:35 AM
Last Updated : 17 Dec 2015 10:35 AM
நாடு முழுவதும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க வெளிப்படையான நடைமுறை ஒன்றை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தற்போது கொலீஜியம் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 93-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை இருந்து வருகிறது.
கொலீஜியம் அமைப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நான்கு முக்கிய நீதிபதிகள் இடம்பெறுகின்றனர். இதை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இருப்பினும், கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த நடைமுறையை மேம்படுத்த உறுதியளித்தது.
இதுகுறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், எம்.பி.லோக்கூர், குரியன் ஜோசப், ஏ.கே.கோயல் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொலீஜியம் முறையை மேம்படுத்தும் வகையில், நீதிபதிகள் நியமன செயல்முறை திட்டம் ஒன்றை வகுத்து வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நீதிபதியாக நியமிக் கப்பட தேவையான வயது உள்ளிட்ட தகுதியை நிர்ணயிக்க வேண்டும். நீதிபதிகள் நியமன நடைமுறையை கவனிக்க உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக தலைமைச்செயலகம் அமைக் கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், செயல்முறை திட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம். அதே நேரத்தில், நியமனத்தில் ரகசியம் காப்பதும் சமமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நியமன நடைமுறையின்போது, கூட்டத்தில் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை கருத்துகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட வேண்டும்.
நியமனத்தின் ஒவ்வொரு கட்ட நிலவரமும் அந்தந்த உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் மூலமும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையதளம் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். புகார் தெரிவிக்கவும் அதை விசாரித்து கருத்தில் கொள்ளவும் வழிவகை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய செயல்முறை திட்டத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோ சித்த பின், மத்திய அரசு இறுதி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டத்தில் ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டபின் அவர் முடிவெடுப்பார் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT