Last Updated : 24 Apr, 2021 03:44 PM

2  

Published : 24 Apr 2021 03:44 PM
Last Updated : 24 Apr 2021 03:44 PM

கரோனா 2-வது அலை ஒரு சுனாமி; எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் | மே, ஜூனில் அதிகரிக்கலாம்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் 2-வது அலை சுனாமி போல் இருக்கிறது. ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுக் காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லியில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கங்கா ராம் மருத்துவமனையில் 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நேற்று இரவு ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் சப்ளையைச் சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டுவந்து கொடுங்கள் என்று மத்திய அரசை விளாசினர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தீர்ந்துபோகும் நிலையில் இருக்கிறது. போதுமான ஆக்சிஜன் சப்ளையும் டெல்லி அரசிடம் இருந்து இல்லை. இதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு ஆகியோர் முன் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “கரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு குறைவாகத்தான் இருக்கிறது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்போர் உயிரிழக்கின்றனர். ஆனால், அந்த உயிரிழப்பையும் நாம் தடுக்க வேண்டும். சமீபத்தில் கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில், மே மாதம் நடுப்பகுதியில்தான் கரோனா 2-வது அலை உச்சத்தை அடையும் எனத் தெரிவித்துள்ளது.

கரோனா 2-வது அலை என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இது சுனாமி. இந்த சுனாமி உச்சமடையும் நேரத்தில் அதை எதிர்கொள்ள மத்திய அரசு தேவையான மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன்கள் ஆகியவற்றைத் தயார் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “மே மற்றும் ஜூன் மாதங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த மோசமான காலத்தை எதிர்கொள்ள தேசம் தயாராக இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு விஷயத்தில் பணியாற்றி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யவும் முடிவு எடுத்துள்ளார்கள். உள்நாட்டிலும் ஆக்சிஜன் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மேஹ்ரா ஆஜரானார். அவர் கூறுகையில், “டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. ஆனால், 350 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளது. அதிலும் நேற்று 295 மெட்ரிக் டன் மட்டுமே வந்துள்ளது. டெல்லிக்கு மொத்தம் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கட்டாயம் தேவை.

இல்லாவிட்டால், 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சுகாதார அமைப்பு உருக்குலைந்துவிடும். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் நிலைமை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், ஏதாவது மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” எனத் தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “மேத்தா, எப்போது டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். சரியான தேதியைக் கூறுங்கள். மத்திய அரசு பணியாற்றவில்லை என்று யாரும் குற்றம் சாட்டவில்லை. அதே நேரம், கூட்டம் கூட்டமாக மக்கள் மடிவதை யாரும் பார்க்க முடியாது.

ஆக்சிஜன் சப்ளையைத் தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம். ஆக்சிஜன் சப்ளையைத் தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும். அந்த அதிகாரிகளைத் தூக்கில் போடுவோம்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x