Published : 24 Apr 2021 02:41 PM
Last Updated : 24 Apr 2021 02:41 PM
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலையால் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தடுக்க முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தில் இருக்கிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாள்தோறும் பல கரோனா நோயாளிகள் பல்வேறு மாநிலங்களில் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் சப்ளையைச் சீரமைக்க மத்திய அரசும் போராடி வருகிறது.
ஆக்சிஜன் சப்ளையைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கரோனா வைரஸ் 2-வது அலையால் பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனத் தெரிந்திருந்தும் முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கரோனா குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடாளுமன்ற நிலைக்குழுவும் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால், 2-வது அலை குறித்து தெரிந்தும், நேற்றுவரை ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒட்டுமொத்த மற்றும் மிக மோசமான அலட்சியப் போக்கு இல்லையா? இதற்கு ஒருவர் கூட பொறுப்பேற்க மாட்டீர்கள். இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும், சுகாதாரத்துறைச் செயலாளரும் பதவி விலக வேண்டாமா?
மருத்துவமனையில் தங்களின் அன்புக்குரியவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தங்கள் உறவினர்களுக்க சிகிச்சை அளிக்கக் கோரி மருத்துவர்களிடம் மன்றாடுகிறார்கள். நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துவரும் போது, தங்கள் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள்.
ஆக்சிஜன் சப்ளையைச் சரிசெய்யக் கோரி மருத்துவமனைகள் நீதிமன்றம் நோக்கி ஓடுகின்றன. உண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் அவர் பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறுகையில், “மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதித்ததை வரவேற்கிறேன். இந்த முடிவை எடுக்க நாங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தோம். இந்த முடிவு மிகப்பெரிய பொறுப்புக்கு உள்ளாக்கும்.
தடுப்பூசி முகாமைத் தொடங்கும் முன், தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தடுப்பூசி போதுமான அளவில் இல்லை எனப் பல்வேறு இடங்களில் இருந்து புகார் வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு கூறுவதில் உண்மையில்லை. அது வெற்றுப் பேச்சு.
மே 1-ம் தேதி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தப் படையெடுப்பார்கள், மருத்துவமனைக்கு ஏராளமானோர் வரக்கூடும். ஆதலால், நாடு முழுவதும் தடுப்பூசியைப் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். தடுப்பூசி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மக்களைத் திருப்பி அனுப்பினால், அது பெரிய அதிருப்தியையும், போராட்டத்தையும் உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT