Published : 24 Apr 2021 02:05 PM
Last Updated : 24 Apr 2021 02:05 PM
டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் இருக்கும் ஆக்சிஜன் இன்னும் 2 மணி நேரம் மட்டுமே போதுமானதாக இருக்கும். உடனடியாக ஆக்சிஜனை அனுப்புங்கள் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் மோசமாக இருந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைவால் நாள்தோறும் பல கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் சப்ளையைச் சீரமைக்க மத்திய அரசும் போராடி வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டரில் ஆதேஷ் குப்தா விடுத்த உருக்கமான வேண்டுகோளில், “டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இதில் 140 பேருக்கு மேல் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைக்கு நேற்று ஆக்சிஜன் டேங்கரில் சப்ளை கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை. 1.5 டன் ஆக்சிஜன் கிடைத்தபோதிலும் அதில் 200 கியூப் மீட்டர் மட்டுமே இருப்பு இருக்கிறது
இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணாவிடம் பேசினேன். டெல்லியில் சூழல் மிக மிக மோசமாக இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும். இன்னும் 2 மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது.
ஆதலால், டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் கேஜ்ரிவால் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் சப்ளைக்கு உதவ வேண்டும். கரோனா நோயாளிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கங்கா ராம் மருத்துமனையில் நேற்று முன்தினம் கரோனா நோயாளிகள் 25 பேர் உயிரிழந்ததற்கு குறைந்த அழுத்தத்தில் ஆக்சிஜன் சப்ளை கிடைத்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறையால் குறைந்த அழுதத்தத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அதிகமான அழுத்தத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை. அதே சூழல்தான் இப்போதும் நிலவுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT