Published : 24 Apr 2021 08:45 AM
Last Updated : 24 Apr 2021 08:45 AM
இணையதளத்தில் தனியார், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்டின் டேராடூன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் ஸ்ரீவாத்ஸவாவின் இந்த புதிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
கரோனாவின் இரண்டாவது பரவல் நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. இதில், தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி, இறங்கும் நிலை உருவாகி உள்ளது.
இதன் இடைப்பட்ட நேரங்களில் பல உயிர்களுக்கு படுக்கைகள் கிடைக்காமல் பலியாவது ஏற்பட்டு வருகின்றது. இதை சமாளிக்க உத்தராகண்டின் தலைநகரான டேராடூன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் ஸ்ரீவாத்ஸவா ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார்.
இதற்காக டேராடூன் மாவட்ட அரசு நிர்வாகத்தின் கரோனா கட்டுப்பாட்டு அறை பெரும் உதவியாக உள்ளது. இதற்கு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள் குறித்த தகவல் பறிமாறப்படுகிறது.
ஆட்சியர் ஆஷிஷின் உத்தரவால் உடனுக்குடன் கிடைக்கும் இந்த தகவல், மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்கின்றனர்.
இதனால், உயிருக்கு போராடும் நோயாளிகளை, வாகனங்களில் ஏற்றி பல இடங்களில் அலையச் செய்வது தவிர்க்கப்படுகிறது. படுக்கைகள் காலியாக உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் நேராக சென்று அனுமதிக்கப்பட்டு விடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில், காலியானப் படுக்கைகளின் விவரங்களை அளிக்காமல், தவறானத் தகவலை தருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலும் இந்த இணையதளத்தில் வெளியாகும் தகவல் சரியானதாகவே இருப்பதாகத் தெரிந்துள்ளது.
தற்போது காலியாகும் படுக்கைகளை மட்டும் கிடைத்து வரும் இணையதளத்தில் மேலும் கூடுதலானத் தகவல்களை அளிக்க முயற்சிக்கப்படுகிறது. மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் விவரங்கள் போன்றவையும் அளிக்கத் திட்டமிடப்படுகின்றன.
இதுபோன்ற தகவல்கள் அளிக்க வேறு பல மாநிலங்களின் அரசு இணையதளங்களிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் சில தவறானத் தகவல்கள் வெளியாகி அந்த இணையதளங்கள் தன் உண்மைத்தன்மையை இழந்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலை டேராடூனிற்கும் ஏற்பட்டு விடாமல் முன் எச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் எடுத்து வருகிறார். இதற்காக அவர் அவ்வப்போது காலியானப் படுக்கைகளின் உண்மைத்தன்மையை சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு போனில் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
இது உத்தராகண்ட்வாசிகளால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த முறையை உத்தராகண்டின் மேலும் பல மாவட்டங்கள் கடைப்பிடிக்கத் திட்டமிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT