Published : 23 Apr 2021 08:58 PM
Last Updated : 23 Apr 2021 08:58 PM
இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, செயில் தலைவர் சோமா மண்டல், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சாஜன் ஜிந்தால், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் நவீன் ஜிந்தால், ஏஎம்என்எஸ் நிறுவனத்தின் திலீப் ஓமன், லிண்டே நிறுவனத்தின் எம் பானர்ஜி, ஐனாக்ஸ் நிறுவனத்தின் சித்தார்த் ஜெயின், ஜாம்ஷெட்பூர் ஏர் வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நொரியோ சிபுயா நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் நிறுவனத்தின் ராஜேஷ் குமார் சரப், அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் சாகெட் திகு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டியது அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
கடந்த சில வாரங்களாக உற்பத்தியை அதிகரித்ததற்காக ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பிரதமர் பாராட்டினார். திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர் ஆமோதித்தார்.
நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள, தொழிற்சாலை ஆக்ஸிஜனை மாற்றிவிட்டதற்காக ஆக்ஸிஜன் தொழில்துறையினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
நிலைமையை மேம்படுத்த, வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார். இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் அதேபோல் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கான வசதியையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு, இதர கேஸ் டேங்கர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் ஆக்ஸிஜன் தொழில்துறையினரை வலியுறுத்தினார்.
மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு, காலி ஆக்ஸிஜன் டேங்கர்களை உற்பத்தி மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார்.
மத்திய அரசு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் தொழில் துறையினர், போக்குவரத்து உரிமையாளர்கள், மருத்துவமனைகள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறந்த கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தான், இந்த சவாலை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த நெருக்கடியை நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT