Published : 23 Apr 2021 07:18 PM
Last Updated : 23 Apr 2021 07:18 PM

கரோனா அவசரப் பணி: ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை எடுத்துச் செல்லும் விமானப்படை

புதுடெல்லி

கரோனா பரவல் சூழலில் ஆக்சிஜன் கொள்கலன்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை இந்திய விமானப்படை பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் எடுத்து செல்கிறது.

புதிதாக அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளுக்கு எதிரான போரில் களத்தில் குதித்துள்ள இந்திய விமானப்படை, கரோனா மருத்துவமனைகள் மற்றும் மையங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் கொள்கலன்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் கொண்டுச் செல்கிறது.

இந்திய விமானப்படை போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சி-17, சி-130ஜே, ஐஎல்-76, ஏஎன்-32 மற்றும் அவ்ரோ உள்ளிட்ட போக்குவரத்து விமானங்கள் இவற்றில் அடங்கும். சினூக் மற்றும் எம்-17 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொச்சி, மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரில் இருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

சி-17 மற்றும் ஐஎல்-76 இந்திய விமானப்படை விமானங்கள் மிகப்பெரிய காலி ஆக்சிஜன் டேங்கர்களை, அவை பயன்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து எடுத்துவந்து மிகவும் தேவைப்படும் ஆக்சிஜன் விநியோகத்திற்கான வேகத்தை கூட்டுகின்றன.

மேலும், லே-யில் கரோனா பரிசோதனை மையத்தை அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை சி-17 மற்றும் ஐஎல்-76 விமானங்கள் எடுத்துச் சென்றன. குறுகிய கால அவகாசத்தில் பணியமர்த்துவதற்காக இந்திய விமானப்படையின் போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டர் வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

2020-ம் ஆண்டு கரோனா பரவல் ஆரம்பித்த நாட்களில் மருந்துகள், மருத்துவ மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும் பல்வேறு விமானங்களை இந்திய விமானப்படை இயக்கியது நினைவிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x