Published : 23 Apr 2021 06:15 PM
Last Updated : 23 Apr 2021 06:15 PM
இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதைச் சரி செய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பி வருகிறது,ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதுமட்டுமின்றி கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவர் உட்பட பல மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசியின் தேவையை திடீரென அதிகமாக்கியுள்ளது.
தற்போதை கோவிட் அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அவசர அனுமதி அளித்துள்ளார். விராபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆன்டி வைரலுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் 7 நாட்களுக்குள் ஆர்டி-பி.சி.ஆர்சோத்னையில் கரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் நேரத்தையும் குறைக்கிறது.
நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது.
கரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு பிரச்சினையை ஆன்டி வைரல் மருந்து கட்டுப்படுத்த முடியும் என்பது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT