Published : 22 Apr 2021 10:09 PM
Last Updated : 22 Apr 2021 10:09 PM
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின் என பருவநிலை குறித்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பருவநிலை குறித்த உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளையும் நடைபெறுகிறது.
2030 ஆம் ஆண்டுக்கு நமது ஒட்டுமொத்த வேகம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக தலைவர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த முன்முயற்சிக்காக அமெரிக்க அதிபர் பிடனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிராக மனிதகுலம் தற்போது போராடிக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் பெரும் அச்சுறுத்தல் இன்னும் மறையவில்லை என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
உண்மையில், பருவநிலை மாற்றம் என்பது உலகில் உள்ள பல லட்சக்கணக்கானோர் எதிர்கொண்டு வரும் உண்மையாகும். அவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எதிர்மறை விளைவுகளை ஏற்கனவே சந்தித்து வருகின்றன.
பருவநிலை மாற்றத்தை மனிதகுலம் எதிர்கொள்வதற்கு வலுவான நடவடிக்கை தேவைப்படுகிறது. மிகவும் வேகமாக, பெரிய மற்றும் சர்வதேச அளவில் அத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் நாங்கள் எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.
2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் எங்களது இலக்கு எங்களின் உறுதியை காட்டுகிறது.
வளர்ச்சி சவால்களுக்கு இடையில், தூய்மை எரிசக்தி, எரிசக்தி சிக்கனம், காடு வளர்ப்பு மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு வலுவான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இவற்றின் காரணமாக தேசிய முடிவெடுக்கப்பட்ட பங்களிப்பு 2-டிகிரி-செல்சியசுக்கு இணக்கமாக உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, லீட் ஐடி மற்றும் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பு ஆகிய சர்வதேச முன்முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவளித்துள்ளோம்.
பருவநிலையில் அக்கறையுள்ள வளரும் நாடான இந்தியா, எங்கள் நாட்டில் நீடித்த வளர்ச்சிக்கான மாதிரிகளை உருவாக்குவதற்காக பங்குதாரர்களை வரவேற்கிறது. பசுமை நிதி மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள் குறைந்த விலையில் தேவைப்படும் இதர வளரும் நாடுகளுக்கும் இது உதவும்.
இதன் காரணமாகத் தான், 'இந்திய-அமெரிக்க பருவநிலை மற்றும் தூய்மை எரிசக்தி லட்சியம் 2030 கூட்டணி"-ஐ அதிபர் பிடனும் நானும் தொடங்குகிறோம். முதலீடுகளை ஈர்க்கவும், தூய்மை தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தவும், பசுமை கூட்டணிகளை உருவாக்கவும் நாங்கள் இணைந்து உதவுவோம்.
இன்றைக்கு, சர்வதேச பருவநிலை நடவடிக்கையை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இந்தியாவில் தனி மனித கரியமில தடம் சர்வதேச சராசரியை விட 60 சதவீதம் குறைவாகும். நீடித்த பாரம்பரிய செயல்பாடுகளில் எங்களது வாழ்க்கைமுறையின் வேர்கள் இன்னும் உள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது.
எனவே, பருவநிலை மாற்ற நடவடிக்கையில் வாழ்க்கைமுறை மாற்றத்தின் முக்கியத்துவதை வலியுறுத்த இன்றைக்கு நான் விரும்புகிறேன். நீடித்த வாழ்க்கைமுறை மற்றும் 'மறுபடியும் அடிப்படைகளை நோக்கி' எனும் வழிகாட்டும் தத்துவம் கொவிட்டுக்கு பிந்தைய நமது பொருளாதார யுக்தியின் முக்கிய தூணாக இருத்தல் வேண்டும்.
மிகப்பெரிய இந்திய துறவியான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நான் நினைவுபடுத்துகிறேன். "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!" என்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவர் நமக்கு அழைப்பு விடுத்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT