Published : 22 Apr 2021 08:26 AM
Last Updated : 22 Apr 2021 08:26 AM
மேற்குவங்கத்தில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 5 கட்டத் தேர்தல் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று 6-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்கத்திலும் கரோனா வேகமெடுத்து வரும் சூழலில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
சமூகவிலகலைக் கடைபிடிப்பதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதேபோல், இந்தத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகமாக இருப்பதால் 779 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 107 கம்பெனிகள் மிகவும் பதற்றமான தொகுதியாகக் கண்டறியப்பட்டுள்ள பாரக்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தல் களத்தில் 306 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 27 பேர் பெண்கள் ஆவர். 82 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
பிரதானக் கட்சிகளைப் பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸின் உஜ்ஜல் பிஸ்வாஸ், ஸ்வபன் தேப்நாத், சந்திரிமா படடாச்சார்யா, பாஜகவின் தேசிய துணைத்தலைவர் முகுல் ராய், காங்கிரஸின் மோஹித் சென்குப்தா, அப்துஸ் சத்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மோஸ் பட்டாச்சார்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மாநிலத்தில் எஞ்சியுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. மே 2-ம்தேதி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பிரதமர் அழைப்பு:
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதில், "மேற்குவங்கத்துக்கு புதிய சட்டப்பேரவையைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கின்றனர். இன்று 6ம் கட்டத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT