Published : 21 Apr 2021 06:28 PM
Last Updated : 21 Apr 2021 06:28 PM
கரோனா வைரஸால் தேசத்தில் சுகாதாரப் பேரழிவு உருவாக பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாளை நடக்கும் 6-வது கட்டத் தேர்தலில் தேசத்தின் குரலாக இருந்து மேற்கு வங்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் ஏற்கெனவே 5 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மேற்கு வங்க வாக்காளார்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''தேர்தல் நடத்துவது அரசின் பொறுப்பாக இருக்கிறது. ஆனால், கரோனா வைரஸால் சுகாதாரப் பேரழிவில் இந்த தேசம் வீழ்ந்ததற்கு பாஜக மட்டும்தான் பொறுப்பு. ஒட்டுமொத்த தேசத்தின் மக்களின் நம்பிக்கையும் மேற்கு வங்க வாக்காளர்களின் கரங்களில்தான் இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் நாளை 6-வது கட்டத் தேர்தல் நடக்கிறது. ஒட்டுமொத்த தேசத்தின் குரலாகப் பேசுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும். நாட்டில் கரோனா வைரஸ் சூழல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து என்ன மாற்றத்தைச் சந்தித்துள்ளது? ஏதாவது மாறியிருந்தால், அந்த மாற்றம் மிக மோசமானதாக இருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த மாநிலம் செல்வதை நான் தொலைக்காட்சியில் பார்க்கிறேன். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்த்தபோது மனது வலிக்கிறது.
தடுப்பூசிக்குப் பற்றாக்குறையே ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். சுகாதாரத்துறை அமைச்சரை நம்புங்கள். உண்மையில் கரோனா நோயாளிகள்தான் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். கரோனா நோயாளிகளில் யாருக்கெல்லாம் தடுப்பூசி தேவை என்பது குறித்து அரசு விளம்பரம் வெளியிடும்.
ரயில் நிலையத்தில் கூட்டமே இல்லை என்று ரயில்வே அமைச்சர் கூறுகிறார். ரயில்வே அமைச்சரை நம்புங்கள். நீண்ட வரிசையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிற்பது தொலைக்காட்சி சேனல்களில் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. அந்த நீண்ட வரிசை ரயில் நிலையங்களைப் பாதுகாக்க போலீஸார் நிற்கிறார்கள்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT