Last Updated : 21 Apr, 2021 04:09 PM

2  

Published : 21 Apr 2021 04:09 PM
Last Updated : 21 Apr 2021 04:09 PM

நாசிக் நகரில் சோகம்: ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; சப்ளை நிறுத்தப்பட்டதால் 22 கரோனா நோயாளிகள் பலி

நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்ட காட்சி | படம் உதவி: ட்விட்டர்.

நாசிக்

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்டுவந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, கசிவை அடைக்க ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாசிக் நகரில் ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக ஆக்சிஜன் டேங்கர் லாரி இன்று வந்தது. மருத்துவனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கருக்கு, லாரியிலிருந்து ஆக்சிஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனையில் ஐசியூ வார்டில் கரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் சிகிச்சையுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். திடீரென ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, 22 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே நிருபர்களிடம் கூறுகையில், “தற்போது கிடைத்த தகவலின்படி, ஜாகீர் ஹுசைன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட தடையால் 22 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோயாளிகள் அனைவரும் வென்டிலேட்டர் சிகிச்சையிலும், ஆக்சிஜன் சிகிச்சையிலும் இருந்தனர். ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவால் திடீரென ஆக்சிஜன் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மகராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், “ஜாகீர் ஹுசைன் மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து மாநில அரசு தீவிரமாக விசாரணை நடத்தும். முதல்கட்ட தகவலில் ஆக்சிஜன் கொண்டு வந்த லாரியில் ஏற்பட்ட கசிவால், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் கிடைப்பதில் ஏற்பட்ட தடையால் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஏற்பட்டதும், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், நோயாளிகளின் உடன் வந்தோர் பலரும் அலறியடித்து ஓடினர். ஆக்சிஸன் கசிந்ததால் மருத்துவமனை வளாகம் முழுவதும் வெள்ளைப் புகை சூழ்ந்தது. உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டரில் உள்ள கசிவை அடைத்தனர்.

ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 31 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x