Last Updated : 21 Apr, 2021 12:53 PM

5  

Published : 21 Apr 2021 12:53 PM
Last Updated : 21 Apr 2021 12:53 PM

கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகள், ஜனவரி-மார்ச்சில் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தால் பற்றாக்குறை வராதா?- மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளையும், ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் 6 கோடி தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்தால் தட்டுப்பாடு வராதா, உலகிலேயே அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நமக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. 2.50 லட்சத்துக்கும் மேலான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், மத்திய அரசு அவ்வாறு தட்டுப்பாடு ஏதுமில்லை, சரிசெய்யப்படும் என்று கூறி வருகிறது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''நாட்டில் இன்று நிலவும் சூழலில் மக்கள் தடுப்பூசிக்காவும், மருந்துக்காகவும், ஆக்சிஜனுக்காகவும், படுக்கை வசதிக்காகவும் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ மக்கள் படும் துன்பம் குறித்து உணர்வற்று, அதிகார ஆசை பிடித்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு நடக்கும் பல்வேறு பேரணிகளில் பேசி சிலர் சிரிக்கிறார்கள். எப்படி உங்களால் மட்டும் முடிகிறது? மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் நலனைவிட, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில்தான் ஆர்வம்.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குக் காரணம், ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு செல்ல போதுமான போக்குவரத்து வசதியில்லை. கரோனா வைரஸ் 2-வது அலை தாக்கும் எனத் தெரிந்தும் ஏன் முன்கூட்டியே போக்குவரத்து வசதிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவில்லை. கரோனா 2-வது அலையைச் சமாளிக்க மத்திய அரசு முறையான திட்டமிடல்களை வகுக்கவில்லை.

இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நாடு என்பது போன்று பிரதமர் மோடி நடிக்கிறார். அப்படியென்றால், இந்தியாவில் ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டுள்ளது? மத்திய அரசு நடத்திய செரோ-சர்வே ஆய்வில் 2-வது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரித்தும் ஏன் கவனிக்கவில்லை? புறக்கணித்தீர்கள்.

மத்திய அரசுக்குப் போதுமான நேரம் இருந்தது. ஆனால், இன்று 2 ஆயிரம் டிரக்குகளில் மட்டுமே ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. ஆக்சிஜன் கிடைக்கிறது. ஆனால், அதைக் கொண்டுசெல்ல முடியவில்லை என்பது வேதனையானது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஜனவரி மார்ச் மாதத்தில் மட்டும் 6 கோடி தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு செய்தால் பற்றாக்குறை வராதா?

இந்தத் தடுப்பூசிகளை வைத்து 4 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்திவிடலாம். ஏன் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை?

மோசமான திட்டமிடல் காரணமாகத்தான் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சரியான நிர்வாகத் திறமை இல்லாததால்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மத்திய அரசின் தோல்விதான்.

நாடு முழுவதும் கரோனா பரிசோதனையை ஏன் தீவிரப்படுத்தவில்லை, ஏன் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தவில்லை, ஏன் குறைத்துக் காட்டப்பட்டது? தனியார் ஆய்வுக்கூடங்கள் பரிசோதனை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. மக்களின் உயிர் முக்கியமா அல்லது கரோனா லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதால் உங்கள் அரசு குறித்து நீங்கள் கட்டமைத்துள்ள தோற்றம், மரியாதையைக் குலைத்துவிடும் என்று அச்சப்படுகிறீர்களா?''

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x