Published : 21 Apr 2021 11:26 AM
Last Updated : 21 Apr 2021 11:26 AM
கரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை வைக்க வேண்டும். மருந்து நிறுவனங்களை விலை வைக்க அனுமதித்தால் ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்தது.
அதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் புதிய மருந்துக் கொள்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மகான் ஆகியோர் காணொலி மூலம் நேற்று பேட்டி அளித்தனர்.
அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு தேசம் ஒரே வரி, ஒரு தேசம் ஒரு தேர்தல் என நம்பிக்கை வைத்துள்ளது. அதேபோல, தடுப்பூசி விஷயத்திலும் ஒரே தேசம், ஒரே விலை என்பதை அமல்படுத்த வேண்டும்.
புதிய மருந்துவிலைக் கொள்கையால் மாநில அரசு, மத்திய அரசு மருத்துமனைகள், தனியார் மருத்துவமனைகளில் வேறுபட்ட விலையில் விற்பனை செய்யக்கூடும். நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை ஏன் வைக்கக் கூடாது. இது நியாயமான கோரிக்கைதானே. தனியார், மாநில, மத்திய அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை இருக்க வேண்டும்.
மத்திய அரசு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 50 சதவீதத்தைக் கொள்முதல் செய்து, மீதம் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது நியாயமற்றது, சமத்துவமில்லாதது. மாநில அரசுகளுக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. ஒரே தேசம் பல விலைகள் என்பதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:
''கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறது என்பதை முதலில் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மருந்துக் கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. இந்த மருந்துக் கொள்கையில் ஏற்கக்கூடிய விஷயம் இருந்தால் வரவேற்கிறோம். ஆனால், திருத்தப்பட்ட இந்தத் தடுப்பூசிக் கொள்கை என்பது, பிற்போக்குத்தனமாகவும், சமத்துவமற்றதாகவும் இருக்கிறது.
திருத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்கையில், மத்திய அரசு தனது பொறுப்புகளைக் கைவிட்டுத் தப்பிக்கிறது. மாநிலங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்றுகிறது. தடுப்பூசி தயாரிக்கும் மருந்து நிறுவனங்களை லாபம் சம்பாதிக்க ஊக்கப்படுத்துகிறது. மாநிலங்களுக்கு இடையே சமத்துவமின்மையையும், ஏழை, பணக்காரர்களுக்கு இடையே சமத்துவமின்மையையும் ஏற்படுத்தும்.
உலகில் எந்த நாடும், தடுப்பூசி திட்டத்தில் சந்தைக் காரணிகளைத் தீர்மானிக்க அனுமதிக்கவில்லை, விலை வைக்கவும் அனுமதிக்கவில்லை. திருத்தப்பட்ட தடுப்பூசிக் கொள்கையில், மருந்தைக் கொள்முதல் செய்தல், விலை, ஏழைகளுக்குத் தடுப்பூசி செலுத்துதல், 45 வயதுக்குக் கீழானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டியது இருக்கும்.
தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருந்து நாட்டில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை மத்திய அரசின் கொள்கை காட்டுகிறது.
மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி வருவாய்க் குறைவு, வரி வருமானம் பாதிப்பு, மானியங்கள், சமூக நலத் திட்டங்கள் எனப் பல செலவுகள் இருக்கும்போது தடுப்பூசிக்கான செலவு கூடுதல் சுமையை ஏற்றும். பிஎம் கேர்ஸ் அமைப்பை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் பெற்றது என்ன ஆனது?''
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT