Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸும் தங்கள் பிரச்சாரத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, முதல்வர் மம்தாவும் பிரதமர் மோடியும் தங்கள் பிரச்சாரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாக தங்கள் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இடதுசாரி கட்சித் தலைவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸும் அதே முடிவை எடுத்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல் காந்தி, 3 கட்ட தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். மற்ற தலைவர்களும் இத்தகைய முடிவு எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனதுபிரச்சாரத்தை மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு பதிலாக சிறிய கூட்டங்கள் நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவரான முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மம்தா கூறும்போது, “ஏப்ரல் 26-ல்எனது வடக்கு கொல்கத்தா கூட்டத்தை தவிர மற்ற அனைத்து பெரிய கூட்டங்களையும் ரத்து செய்கிறேன். மற்ற கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கருத்து கூற மாட்டேன். எனது கூட்டங்களில் பேசும் நேரத்தையும் 10 முதல் 15 நிமிடங்களாக குறைத்துக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.
மம்தாவின் அறிவிப்பை தொடர்ந்து அவரை தீவிரமாக எதிர்க்கும் பாஜகவும் பிரச்சாரத்தில் மாற்றம் செய்துள்ளது. எஞ்சிய 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை சிறிய அளவில் 500 முதல் 1000 வரையிலான மக்களுடன் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற 5 கட்டதேர்தலிலும் பிரதமர் மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். இப்போது இவர்களது கூட்டங்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மேற்கு வங்க பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “ஏப்ரல் 22-ல் பெல்ராம்பூர், மால்டாவிலும் ஏப்ரல் 24-ல் சூரி, தெற்கு கொல்கத்தாவிலும் பிரதமர் மோடியின் கூட்டங்கள் உள்ளன. இவற்றை ஒரே கூட்டமாக ஏப்ரல் 23-ல் வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
இதனிடையே எஞ்சிய மூன்று கட்ட தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்தார். ஆனால் இது சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT