Published : 20 Apr 2021 05:32 PM
Last Updated : 20 Apr 2021 05:32 PM
மக்களவை எம்.பி. ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் எனப் பலரும் முதல் அலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சியிலும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எனப் பல தலைவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘லேசான அறிகுறியை உணர்ந்ததால் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள்’’ எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘மக்களவை எம்.பி. ராகுல் காந்தி பூரண உடல்நலத்துடன், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT