Published : 20 Apr 2021 04:21 PM
Last Updated : 20 Apr 2021 04:21 PM
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி தொற்று 2.5 லட்சத்துக்கும் மேலாக இருந்துவரும் நிலையில், அனைத்துத் தரப்பினரையும் கரோனா தொற்று பாதிக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் என்ன தடுப்பு முறையைக் கடைப்பிடித்தாலும் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இதைத் தெரிவித்துள்ளனர். கரோனா காரணமாகவே இரு மூத்த அதிகாரிகளும் வீட்டில் இருந்து பணிபுரிவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத் தேர்தலில் இன்னும் 3 கட்டத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை ஒரே கட்டமாக நடத்தக் கோரி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் இரு மூத்த அதிகாரிகளுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர 2 துணை ஆணையர்கள் இருப்பார்கள். தற்போது 3-வது ஆணையருக்கான பதவி கடந்த 13ஆம் தேதி முதல் காலியாக இருக்கிறது. இதுவரை புதிதாக யாரும் நிரப்பப்படவில்லை.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவும், துணை ஆணையரும், மூத்த அதிகாரிகள் சிலரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பதால், இதுவரை 3-வது இடத்துக்கான பேச்சு குறித்து ஏதும் நடக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 3 கட்டத் தேர்தல்களையும் அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம், காணொலி மூலம் அனைத்து அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி, ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT