Last Updated : 20 Apr, 2021 03:43 PM

1  

Published : 20 Apr 2021 03:43 PM
Last Updated : 20 Apr 2021 03:43 PM

கரோனா சிகிச்சை: தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட குஜராத் மசூதி

புதுடெல்லி

கரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் மருத்துவமனையாக குஜராத்தின் வதோதாரவின் மசூதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு தொழுகை நடத்துவதை விட உயிர்களைக் காப்பது முக்கியம் என அதன் நிர்வாகிகள் கருத்து கூறியுள்ளனர்.

கரோனாவின் இரண்டாது அலையால் நாடு முழுவதிலுமான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகாராஷ்டிரா, குஜராத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால், அம்மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கு படுக்கைகளுக்கான இடமின்மை முக்கியக் காரணம்.

இதுபோன்ற ஒரு சூழலில் உதவ பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தம் வழிபாட்டுத் தலங்களை அளிக்க முன்வந்துள்ளனர். இந்தவகையில், குஜராத்தின் வதோதராவிலுள்ள ஜஹாங்கீர்புராவின் முஸ்லிம்கள் தம் மசூதியை அளித்துள்ளனர்.

அன்றாடம் ஐந்துவேளை தொழுகைக்கான இந்த மசூதியில் ரம்ஜான் மாதத்தில் அதிகக் கூட்டம் வருவது உண்டு. எனினும், இம்மசூதியில் தொழுகையை ஜஹாங்கீர்புரா முஸ்லிம்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கு பதிலாக மசூதியினுள் 50 படுக்கைகளுடன் கரோனா நோயாளிகளுக்கானத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றிவிட்டனர். இதனுள், இந்து, முஸ்லில், கிறித்தவர் என சாதி, மத பேதமின்றி அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜஹாங்கீர்புரா மசூதியின் தலைமை நிர்வாகியான இர்பான் ஷேக் கூறும்போது, ''சிக்கலான தற்போதைய சூழலில் அனைவருக்கும் உதவுவது மிகவும் முக்கியம். அரசு, தனியார் என அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாமல் பல உயிர்கள் பலியாகி வருகின்றன. இதைக் காக்க அரசு நிர்வாகத்திடம் மட்டும் முழு பாரத்தையும் சுமத்தாமல் அதை பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும்.

இதை உணர்ந்து நாம் தொழுகையை தம் வீடுகளிலேயே நடத்திக் கொள்ள முடிவு செய்தோம். எங்கள் மசூதியை ஆக்ஸிஜன் உள்ளிட்ட கரோனாவிற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன் மருத்துவமனையாக மாற்றி உள்ளோம்.

அல்லாவின் இடத்தில் அவருக்காக ரம்ஜான் மாதத்தில் செய்ய வேண்டிய புண்ணியம் இதை விட சிறந்ததாக வேறு என்ன இருக்க முடியும்? மனிதநேயத்தை விட மதம் பெரியது அல்ல என்பது எங்கள் கருத்து'' எனத் தெரிவித்தார்.

குஜராத்தின் கரோனா பரவல் அகமதாபாத், சூரத் மற்றும் வதோதராவில் ஆகிய நகரங்களில் அதிகமாக உள்ளது. இதன் மருத்துவமனைகளின் வெளியே அனுமதிக்காக ஆம்புலன்ஸில் படுத்தபடி கரோனா நோயாளிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோத்ரா மசூதி

குஜராத்தின் மற்றொரு முக்கிய நகரமான கோத்ராவின் மசூதியிலும் ஒரு பகுதி கரோனா சிகிச்சைக்காக அனைத்து மதத்தினரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷேக் மஹாவர் சாலையிலுள்ள ஆதம் எனும் அந்த இரண்டடுக்கு மசூதியின் தரைத்தளம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே சிகிச்சைக்கு செயல்பட்டு வருகிறது.

2002இல் கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்த மதக்கலவரம் காரணமாக குஜராத் உலக கவனத்தைப் பெற்றிருந்தது. கரோனா பரவலில் இந்த நிலை மாறி குஜராத்தின் முகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாறி வருவதாகப் பாராட்டப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x