Published : 19 Apr 2021 07:40 PM
Last Updated : 19 Apr 2021 07:40 PM
கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கும் காப்பீடு திட்டத்தை கடந்த மாதம் 24-ம் தேதியுடன் மத்திய அரசு நிறுத்தியதை காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் 90 நாட்களுக்கு மட்டும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் இந்த திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி கொண்டு வந்தார்.
ஆனால் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. கரோனா வைரஸ் முதல் அலையின்போது கோவிட் நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டமாகும்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தில் 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடாக ரூ.1.70 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் காப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த காப்பீடுத் திட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி முடிந்துவிட்டது. இதையடுத்து அந்த காப்பீடு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து. புதிய நிறுவனத்துடன் காப்பீட்டுக்காக பேசி வருவதாக செய்தி வெளியாகியானது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் காப்பீடு இல்லாமல் பணியாற்றுகிறார்கள் என்று செய்தி வெளியானது
இதுகுறித்து மத்திய அரசை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டர் பக்கத்தில், “மத்தியஅரசுக்கு நன்றி எனும் குணமே இல்லாமல் போய்விட்டதா” என்று கண்டித்துள்ளார்.
ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதில் அளிக்கையில் “ கரோனா போர் வீரர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் வழங்கப்படும். இதற்காக நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதுவரை 287 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT