Last Updated : 19 Apr, 2021 06:50 PM

3  

Published : 19 Apr 2021 06:50 PM
Last Updated : 19 Apr 2021 06:50 PM

பாஜக சொல்படி முடிவு எடுக்காதீர்கள் ; 3 கட்ட தேர்தலையும் ஒரே நாளில் நடத்துங்கள்: தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

தினாஜ்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி | படம் ஏஎன்ஐ

சாகுலியா


மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் கடைசி 3 கட்டத் தேர்தலையும், கரோனா வைரஸ் பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், நாளுக்கு நாள் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது, தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு வரும் மக்களும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதால், பெரும் ஆபத்தை மாநிலம் எதிர்நோக்கி இருக்கிறது .

இந்நிலையில் உத்தர் தினாஜ்பூரில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நான் தேர்தல் ஆணையத்திடம் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து நடக்க இருக்கும் 3 கட்டத் தேர்தல்களையும் ஒரேகட்டமாக நடத்துங்கள். அது முடியாவிட்டால் இரு நாட்களில் நடத்துங்கள் ஒருநாளை சேமித்து, மக்களுக்கான கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவேன்.

தயவு செய்து உங்கள் முடிவுகளை பாஜக என்ன சொல்கிறதோ அதன்படி எடுக்காதீர்கள். மக்களின் உடல்நலனை உறுதி செய்யவேண்டுமானால், தேர்தல் நாட்களைக் குறைக்க வேண்டும் குறைந்தபட்சம் ஒரேநாளில் 3 கட்டங்களையும் நடத்த வேண்டும்.

மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் இனிமேல் நானும், திரிணமூல் தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டோம். கடந்த 6 மாதங்களாக கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மோடி அரசு முறையாக ஈடுபடவில்லை.

கலவரத்தை உண்டாக்குவதிலும், சண்டையிடுவதிலுமே பாஜக குறிக்கோளாக இருந்தது. குஜராத் மாநிலமாக மேற்கு வங்கம் மாறக்கூடாது என்றால், இங்கு பாஜகவினரை அனுமதிக்க கூடாது. கூச்பிஹார் சம்பவம் நமக்குப் பாடம். வாக்களித்த வந்த மக்களை துப்பாக்கியால் மத்தியப் படைகளை வைத்து சுட்டுள்ளார்கள். துப்பாக்கி குண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வாக்குகள் மூலம் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x