Published : 18 Apr 2021 04:06 PM
Last Updated : 18 Apr 2021 04:06 PM
மேற்கு வங்கத்தில் நடக்கும் அவசரமான தேர்தல் போருக்கு மத்தியில் நாட்டில் கரோனா வைரஸ் சூழலையும், பிரச்சினைகளையும் ஆய்வு செய்ய சிறிதளவு நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி மேற்கு வங்கத் தேர்தல் மீது அக்கறையாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கரோனா வைரஸ் பரவல் சூழலைப் பார்த்து மே. வங்க தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மே. வங்கத்தேர்தல் மீது மிகுந்த அக்கறையாக இருப்பதும் குறித்தும், நாட்டு மக்களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சிறிதளவுதான் நேரம் ஒதுக்கியுள்ளார் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே “தீதி ஓ தீதி”(சகோதரி ஓ சகோதரி) என்று பிரதமர் மோடி பேசியதையும் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மேற்கு வங்கத்தில் அவசரமான தேர்தல் போரில் நீங்கள் பங்கெடுத்திருக்கும்போது, நாட்டில் நிலவும் கரோனா வரைஸ் பரவல் பிரச்சினைசூழல் குறித்து ஆலோசிக்க சிறிதளவு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.
மேற்கு வங்கத்தின் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி. அந்த மரியாதை கூட இல்லாமல் முதல்வரை தீதி ஓ தீதி என்று பிரதமர் அழைப்பது என்ன முறை. என்னால் ஜவஹர்லால் நேரு, மொர்ர்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோரை மரியாதைக் குறைவான வார்த்தைகளில் பேசினார்களா என நான் நினைத்துக்கூட பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறுகையில் “ பெரும்பாலான மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து இருப்பு இல்லை என்ற பதாகை தொங்குகிறது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனோ தடுப்பூசி பற்றாக்குறை எங்குமே இல்லை என்கிறார்.
மத்தியஅமைச்சர் ஹர்ஷ் வர்த்தனை நம்புங்கள். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து,மருத்துவமனை படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இல்லை. ஆனால், நோயாளிகள் மட்டும்தான் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.
அனைத்து அதிகாரங்களையும் மத்தியஅரசு கையில் வைத்திருந்தாலும், போதுமான அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து சப்ளை செய்ய முடியவில்லை. நாட்டில் கரோனா வைரஸ் சூழல் இந்த அளவு மோசமானதற்கும், பேரழிவு சூழல் ஏற்பட்டதற்கும் முழுமையாக மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மக்களில் பெரும்பகுதியினருக்கு தடுப்பூசி செலுத்தினால்தான் பெருந்தொற்றைத் தடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT