Published : 18 Apr 2021 09:38 AM
Last Updated : 18 Apr 2021 09:38 AM
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளா திருவிழாவுக்குச் சென்று வருபவர்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலும் கட்டாயம் என்று டெல்லி, ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த உத்தரவை மீறி நடந்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .
கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, இன்றுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென அறிவித்ததது. அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹரித்துவார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல சாதுக்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பமேளா திருவிழா கரோனாவைரஸைப் பரப்பும் முக்கிய ஹாட்ஸ்பாட் மையாக இருப்பதால், அங்கு சென்றுவிட்டு வருவோர் அனைவரும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஒடிசா, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளன.
டெல்லியின் தலைமைச் செயலாளர விஜய் தேவ் விடுத்த அறிக்கையில் “ டெல்லியைச் சேர்ந்த மக்கள் யாரெல்லாம் கும்பமேளா திருவிழாவுக்கு சென்று வந்துள்ளவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று வரும் மக்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.
ஏப்ரல் 4 முதல் 17ம் தேதிவரை கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய டெல்லி மக்கள், தங்கள் விவரங்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள் டெல்லி அரசின் கரோனா கட்டுப்பாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல ஏப்ரல் 18 முதல் 30ம் தேதிவரை கும்பமேளாவுக்குச் செல்பவர்களும் தங்கள் விவரங்களை டெல்லியைவிட்டு செல்லும் முன்பாக தனியாக குறிப்பிட வேண்டும். கும்பமேளாவுக்கு சென்றுவந்தவர்களை தீவிரமாகக் கண்காணிக்க இது அரசுக்கு உதவும்.
இந்த விதிமுறைகளை மீறி கும்பமேளாவுக்குச் சென்றுவிட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும், அரசின் கரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கும் 2 வாரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒடிஸா மாநிலம் அரசு பிறப்பித்த உத்தரவில், “ ஒடிசா மாநில மக்கள் கும்பமேளாவுக்கு செல்லும் முன் தங்கள் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கும்பமேளாவுக்குச் சென்று வந்தவர்கள் தங்களை 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு சென்று வந்தவர்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும், அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT