Published : 17 Apr 2021 03:52 PM
Last Updated : 17 Apr 2021 03:52 PM
கரோனா தடுப்பூசி செலுத்தும் வயதை 25 ஆக குறைக்க மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 9% பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தடுப்பு மருந்து செலுத்துவதை பரவலாக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
அதில் சோனியா காந்தி பேசியதாவது,
“கரோனாவின் இரண்டாவது அலை நாட்டை ஆவேசத்துடன் தாக்கியுள்ளது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இரண்டாம் அலைக்கு எதிராக நாட்டை தயார் செய்ய ஒரு வருடம் இருந்தபோதிலும், வருந்தத்தக்க வகையில், நாம் மீண்டும் சிறைப்பட்டுள்ளோம்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து செய்திகளை வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சில மாநிலங்களில் இன்னு சில தினங்களுக்குத்தான் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.
முதல்வர்கள் நடந்த கூட்டத்தில் மருத்துவ தேவைகளுக்காக மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்று உணர்த்தினர்.
பிரதமருடன் மாநில முதல்வர்கள் இதனைதான் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அரசாங்கம் தரப்பில் அமைதி நிலவுகிறது.
எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு செவிசாய்க்காமல், அந்த ஆலோசனைகளை வழங்கியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கப்படுகின்றன. நிச்சயம் இந்த விவாதங்கள் தவிர்க்கப்பட கூடியது. இவை குழந்தைத்தனமானது.
இந்திய அரசு சுமார் 6 கோடிவரை தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. நமது சொந்த நாட்டில் உலகில் மிக அதிகமான தொற்று வீதத்தைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தி, நமது குடிமக்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டாமா.. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள். ஆனால் அரசு தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கூறி வருகிறது. இளைஞர்களும் தீவிர உடல் நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் வயதை குறைக்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பகுதி ஊரடங்கு உத்தரவு, பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முயலும்போது; ஏற்கெனவே பொருளாதாரத்தில் தடுமாறிய மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் தினசரி கூலிகள் மேலும் பாதிக்கப்படுவர். எனவே அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தகுதியான குடிமக்கள் வங்கி கணக்குக்கு சுமார் ரூ. 6,000 வரை அரசு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT