Published : 17 Apr 2021 11:39 AM
Last Updated : 17 Apr 2021 11:39 AM
கும்பமேளா திருவிழா கரோனா வைரஸுக்கு எதிராக இந்த தேசம் நடத்தும் போரின் அடையாளப் பங்கேற்பாக இருக்க வேண்டும், கரோனவுக்கு எதிரான போருக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
உத்தரகாண்ட் சுகாதாரத் துறையினர், போலீஸார் எனப் பலரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .
கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, இன்றுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்ததது. அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹரித்துவார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல சாதுக்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரி, ஆச்சார்யா மஹாமண்டலேஸ்வர் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இன்று உடல் நலம் விசாரித்தார்.
அப்போது, சாதுக்கள் அனைவரும் ஹரித்துவார் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதற்கு பாரட்டுக்களை தெரிவித்துக்கொண்டதுடன் அவர்களின் உடல்நலம் குறித்தும் பிரதமர மோடி விசாரித்தார். மேலும், கரோனாவுக்கு எதிரான போரில் கும்பமேளா திருவிழா அடையாளமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நான் இன்று ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரியுடன் தொலைப்பேசியில் பேசி அவரின் உடல்நலத்தையும், கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மற்ற சாதுக்களின் உடல்நலன் குறித்தும் விசாரித்தேன். உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை அனைத்து சாதுக்களும் அளித்து வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
இரு சஹி புனித நீராடல்கள் நடக்க உள்ளன. கரோனாவுக்கு எதிராக தேசம் நடத்திவரும் போரில், அடையாளமாக கும்பமேளா இருக்க வேண்டும், இந்த போருக்கு ஊக்கம் தருவதாக கும்பமேளா இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசியதையடுத்து, ஜூனா அகாராவின் சுவாமி ஆவ்தேஷ்னாந்த கிரி விடுத்த வேண்டுகோளில் “ பிரதமர் மோடி என்னிடம் பேசினார். அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் உயிரைக் காப்பது புனிதமானது. கும்பமேளாவுக்கு வரும் 27ம் தேதி சஹி புனித நீராடாலுக்கு மக்கள் யாரும் கூட்டமாக வர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT