Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM
இரவுநேர காவலாளியாக வேலைசெய்து அந்த வருமானத்தில் கல்விகற்ற பழங்குடியின இளைஞர் ஒருவர், ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் பனதூர் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி ராமச்சந்திரன் - பேபி தம்பதியின் மகன் ரஞ்சித் (28). வறுமை நிறைந்த குடும்ப சூழலுக்கு மத்தியில் கல்வியில் தடம் பதித்துள்ளார். பழங்குடி சமூகத்தை சேர்ந்தவரான ரஞ்சித் தான், இவரது குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரி ஆவார். அதேநேரம் கல்வி பெறுவது ரஞ்சித்துக்கு மிக எளிதாக நடந்துவிடவில்லை.
ரஞ்சித்தின் வீடு மிகவும் சிறியது. வறுமையான குடும்பச் சூழலால் அந்த வீட்டுக்கு பூச்சுப்பணிகூட செய்யப்படவில்லை. வீட்டின் மேல்பகுதியில் இருக்கும் ஓடுகளும் சூறைக்காற்றால் கடும் சேதம் அடைந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் ஒழுகாமல் இருக்க, அந்த ஓட்டின் மேல் தார்பாலின் ஷீட்கள் விரித்து விடப்படுள்ளது.
இப்படிப்பட்ட தன் வீட்டினை புகைப்படம் எடுத்து, ‘ஐ.ஐ.எம் பேராசிரியர் இங்குதான் பிறந்தார். இங்குதான் வளர்ந்தார். இப்போதும் இங்குதான் வாழ்கிறார். என்னால் முடியுமென்றால், உங்களால் முடியாதா?’ என அவர் முகநூலில் எழுதிய எழுத்துகள் இளைஞர்களின் மத்தியில் தன்னம்பிக்கையை பற்றவைத்தது. இதனால் இந்த பதிவும் வைரலானது.
மொத்த தேசமும் ரஞ்சித்துக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்க, தன்வீட்டு முற்றத்தில் தையல் இயந்திரத்தில் வழக்கம்போல் துணிகளை தைத்துக் கொண்டிருக்கிறார் அவரது தந்தை ராமச்சந்திரன். தன் மகனின் சாதனை குறித்து அவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
எங்கள் சமூகத்தில் படிப்பவர்கள் மிகவும் குறைவு. முன்பெல்லாம் கானகத்தில் வேட்டையாடிதான் வாழ்ந்தோம். என் தலைமுறையில் தையல் கற்றுக்கொண்டு அதை தொழிலாக செய்தேன். ஆனாலும் அதில் போதிய வருமானம் இல்லை. ரஞ்சித் நன்றாக படிப்பார் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பேர் பாராட்டும் அளவுக்கு படிப்பார், தொலைக்காட்சிகளில் எல்லாம் என் மகனின் முகம் வரும் எனகனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. என் வீட்டில் அவர் படித்த சான்றிதழ்களை வைக்கக்கூட நல்ல இடம் கிடையாது.
பனிரெண்டாம் வகுப்பில் நல்லமதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால்மேற்கொண்டு படிக்க வைக்க வசதியில்லை. என் பொருளாதார பலம்ரஞ்சித்திற்கும் தெரியும். திடீரென பனதூர் தொலைத்தொடர்பு நிலையத்தில் இரவுநேரக் காவலாளி வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்துவிட்டார். அந்த சம்பளத்தில் தான் படித்தார். கேரள மத்தியப் பல்கலை.யிலும், தொடர்ந்து சென்னை ஐஐடியிலும் படித்தார். அனைவரும் ரஞ்சித்தை பாராட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சாதித்திருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அவரது தாய் பேபி கூறும்போது, "இரவு முழுவதும் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் கண்விழித்து வேலை செய்துவிட்டு, காலையில் ரஞ்சித் கல்லூரிக்கு செல்வார். அதைப் பார்க்கும்போதே கஷ்டமாக இருக்கும். ஆனால் இன்று இவ்வளவு பெரிய சாதனையை என் மகன் செய்திருப்பதை நினைக்கும்போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. பேராசிரியர்கள் ஷ்யாம் பிரசாத், சுபாஷ் உள்ளிட்ட சிலர் என் மகனுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.
மத்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் ரஞ்சித் இதுகுறித்து கூறும்போது,"என் வீட்டின் புகைப்படத்துடன் சேர்த்து நான் வெளியிட்ட பதிவுவைரலானது. விளம்பரத்திற்கா கவோ, சுய தம்பட்டத்திற்காகவோ நான் அந்த பதிவை வெளியிட வில்லை. இப்படியான வீட்டில்பிறந்து, வளர்ந்த என்னாலேயே ஐ.ஐ.எம். வரை செல்ல முடியுமென்றால், உங்களால் முடியாதா? எனும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே பதிவிட்டேன். இதன்மூலம் ஒரே ஒருவர் தன்னம்பிக்கை பெற்று சாதித்தாலும் அதுதான் எனக்கான வெற்றி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT