Published : 04 Dec 2015 08:24 PM
Last Updated : 04 Dec 2015 08:24 PM
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முடித்து, தமிழக எம்.பி.க்கள் சனிக்கிழமைகளில் தொகுதிகளுக்கு திரும்புவது வழக்கம். தற்போது, சென்னை விமான நிலையம் வெள்ள பாதிப்படைந்துள்ளதால், கோவை மற்றும் பெங்களூரு வழியாக கிளம்பியுள்ளனர்.
ஒவ்வொரு முறை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டங்களுக்காகவும் தமிழக எம்.பி.க்கள் தவறாமல் டெல்லிக்கு விமானங்களில் வருவது வழக்கம். இதேபோல், அக்கூட்டத்தின் வார இறுதியில் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் தம் தொகுதிகளுக்கு சென்று திரும்புவது உண்டு.
ஆனால், வெள்ளம் புகுந்ததால் சென்னை விமான நிலையம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் செயல்படாமல் உள்ளது. இதனால், இன்று வெள்ளிக்கிழமை கூட்டத்தொடரை முடித்த எம்பிக்கள் தமிழகம் திரும்புவது கேள்விக் குறியாக இருந்தது. இதனால், அவர்கள் தம் நாடாளுமன்ற விடுமுறை நாட்களை டெல்லியிலேயே கழிப்பது என முடிவு செய்தனர். எனினும், இவர்களில் சில எம்பிக்களுக்கு வந்த திடீர் யோசனையால் பெரும்பாலானவர்கள் கோவை மற்றும் பெங்களூர் வழியாக தம் தொகுதிகளுக்கு கிளம்பி சென்று விட்டனர்.
இது குறித்து 'தி இந்து'விடம் அதிமுக எம்பிக்கள் வட்டாரம் கூறுகையில், "மழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை காண எங்கள் தொகுதிகளுக்கு செல்வது அவசியமாக உள்ளது. வழக்கமாக பெரும்பாலான எம்பிக்கள் சென்னை வழியாகவே விமானங்களில் தன் தொகுதிகளுக்கு திரும்புவது வழக்கம். திடீர் என இந்த யோசனை வராமல் போய் இருந்தால் நாம் டெல்லியில் அடிக்கும் குளிரில் முடங்கிக் கிடக்க வேண்டி இருந்திருக்கும்" எனக் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற துணை சபாநாயகரான எம்.தம்பிதுரை பெங்களூரு வழியாகவும், தென் மாவட்ட அதிமுக 15 எம்பிக்கள் மதியம் 2.30 விமானத்தில் கோவை வழியாகவும் தம் தொகுதிகளுக்கு திரும்பி உள்ளனர்.
நவநீதிகிருஷ்ணன், வனரோஜா உட்பட சில அதிமுக எம்பிக்கள் டெல்லியில் தங்கி விட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவையின் திமுக தலைவரான கனிமொழி திருப்பதி வழியாக சென்னைக்கு திரும்பியுள்ளார். ஞாயிறு முதல் சென்னை விமான நிலையம் முன்பு போல் இயல்பான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்கப்படுகிறது.
எனவே, கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி வழியாக தமிழகம் திரும்பிய எம்பிக்கள் மீண்டும் திங்கள்கிழமை காலை துவங்கும் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு திரும்புவதில் சிக்கல் இருக்காது என்றும் நம்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT