Published : 16 Apr 2021 01:03 PM
Last Updated : 16 Apr 2021 01:03 PM
கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, அனைத்து அமைச்சக ஊழியர்களும், துறைசார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அதேநேரம் துறையின் செயலர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நேர இடைவேளியில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை ஆகிய அமைச்சகங்கள் தங்களின் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலகத்துக்குக் குறித்த நேரத்துக்கு வருவதில் இருந்து தளர்வு தரப்படுகிறது. அதே நேரம் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அதிகாரிகள் வசித்தால் அவர்கள் அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகள், அலுவலர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்போது 3 விதமான நேரங்களில் பணிபுரியலாம். காலை 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பணிபுரியலாம்.
இதே காலவரையறையை மத்திய அரசின் சுயாட்சி அமைப்புகளும், ஊடகப் பிரிவும், பொதுத்துறை நிறுவனங்களும் பின்பற்றலாம்.
மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் ஒரே நேரத்துக்குள் வராமல் 9 மணி முதல் 10 மணிக்குள் வரலாம். கூட்டமாக அலுவலகத்துக்கு வருவதையும், லிஃப்ட், அலுவலகப் படிகளில் கூட்டமாக ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.
செயலர் அந்தஸ்துக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பணியில் இருப்பதைத் தெரியப்படுத்த வேண்டும். செயல் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் அலுவலகம் வருவதில் விலக்கு இல்லை.
அலுவலகத்தில் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் மட்டும் வருமாறும், மற்றவர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் மாற்றிக் கொள்ளலாம். வீட்டில் இருந்து பணிபுரியும்போது, தொலைபேசி, செல்போன் உள்ளிட்டவை மூலம் எளிதாகத் தொடர்பு கொள்ளுமாறு ஊழியர்கள் இருக்க வேண்டும். அவசரப் பணி இருந்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT