Published : 16 Apr 2021 09:34 AM
Last Updated : 16 Apr 2021 09:34 AM
ஹரியாணாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் மக்களின் கோபத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், உடல்களின் குவியலைக் காணத் தயாராக இல்லை என்று ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹரியாணாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகளை ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ஹரியாணாவில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளதை அடுத்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது, திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஹரியாணா அரசின் கட்டுப்பாடுகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் அளித்த பேட்டியில் கூறுகையில், “கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மக்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் உடல்களின் குவியலைப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இரு வழிகள்தான் இருக்கின்றன. ஊரடங்கைக் கொண்டு வருவது. ஆனால், இப்போதுள்ள நிலையில் சாத்தியமானது அல்ல. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பாகவும், பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லாமலும் வாழ வேண்டும்.
மற்றொரு வழி கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது. ஆதலால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி, கடுமையாக அமல்படுத்தக் கோரியுள்ளோம். மக்கள் கோபப்பட்டால் தாங்கிக் கொள்கிறோம். உடல்களின் குவியலைப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT