Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM
திருப்பதி மக்களவை இடைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்ட நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கஉள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, காளஹஸ்தி, சத்யவேடு ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும், நெல்லூர் மாவட்டத்தில் சர்வே பள்ளி, கூடூரு, வெங்கடகிரி, சூலூருபேட்டா ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளையும் உள்ளடங்கிய திருப்பதி மக்களவை தொகுதிக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் நடைபெற்று வந்தது.
இந்தப் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக டாக்டர் குருமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முதல்வர் ஜெகன் மோகனின் சேவகனே தவிர, மக்களின் சேவகன் அல்ல என எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பனபாகலட்சுமி களத்தில் உள்ளார். பாஜக - ஜனசேனா கூட்டணி சார்பில் கர்நாடக முன்னாள் மாநில தலைமைச் செயலாளர் ரத்னா பிரபாவும் போட்டியிடுகிறார். இதனால் திருப்பதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
கடந்த 3 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திருப்பதியில் முகாமிட்டு அனைத்து 7 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சந்திரபாபு மீது கல்வீச்சு
சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட பொது கூட்ட நிகழ்ச்சியில் அவர் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட பலர் திருப்பதியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
தமிழர்களின் வாக்கு
திருப்பதி மக்களவை தொகுதி யில் அதிகமாக தமிழர்களின் வாக்குகள் இருப்பதால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நடத்திய தேர்தல் பிரச்சாரம் பலரை வெகுவாக கவர்ந்தது.
மேலும், ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன்கல்யாணும் தனது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிசார்பில் துணை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் கடந்த 15 நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தனர். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென்பது முதல்வர் ஜெகன்மோகனின் லட்சியம். ஆனால் அந்த இலக்கை அடைவார்களா அல்லது ஆளும் கட்சியின் மீதான எதிர்ப்பை திருப்பதி மக்களவை இடைத் தேர்தலில் மக்கள் காட்டுவார்களா என்பது வாக்கு எண்ணிக்கையான மே 2ம் தேதி தெரிந்து விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT