Published : 15 Apr 2021 01:21 PM
Last Updated : 15 Apr 2021 01:21 PM
மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஹோட்டல்களை கரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.
நாட்டிலேயே கரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிராதான். அதிலும் மும்பையில் நாளுக்கு நாள் கரோனா பரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 58,952 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். 278 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் பாதிப்பு 35.78 லட்சமாக அதிகரித்துள்ளது. 58,804 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 9-வது நாளாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பிவிட்டன. ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பிவிட்டன.
இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, அதிகமான அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க இரு 5 நட்சத்திர ஹோட்டல்களை மும்பை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்த இரு நட்சத்திர ஹோட்டல்களையும், இரு தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டில் விட்டுள்ளது.
கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள இரு நட்சத்திர ஹோட்டல்களிலும் இன்று (செவ்வாய்) முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கைகளை ஆக்ஸிஜன் வசதியுடன் உருவாக்கவும் மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், “தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் இரு நட்சத்திர ஹோட்டல்களில் இன்று முதல் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். மிகவும் குறைவான அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இரு தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடத்தப்படும் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும், இதில் உணவு, தங்குமிடம் அனைத்தும் அடங்கும். மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட செலவுகள் தனியாகக் கணக்கிடப்படும். ஒரு குடும்பத்தில் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டால், ரூ.6 ஆயிரம் மதிப்பில் இருவர் தங்கும் அறைகளை எடுக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் கூறுகையில், “சில தனியார் மருத்துவமனைகளுக்காக இரு நட்சத்திர ஹோட்டல்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT