Published : 15 Apr 2021 09:56 AM
Last Updated : 15 Apr 2021 09:56 AM
கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில், கரோனாவுக்கு 1,038 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து 5வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,00,739 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,24,29,564 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 14,71,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,038 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 11,44,93,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளாது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 58,952 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தைவிட சற்றே குறைவு. ஒரே நாளில் 278 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 35,78,160 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,804 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
மகாராஷ்டிராவை அடுத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தராவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
டெல்லியில், புதிதாக 17,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே அதிகபட்ச பாதிப்பு. இதற்கிடையில் டெல்லி துணைநிலை ஆளுநருடன் முதல்வர் கேஜ்ரிவால், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரச் செயலர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடகாவில், கடந்த 24 மணி நேரத்தில் 11,265 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அண்மைக்காலமாகப் பெருகிவரும் கரோனா தொற்றால் ஊரடங்கு ஏதும் அமலுக்கு வராது எனக் கூறியுள்ள அம்மாநில அரசு வரும் 20ம் தேதி (ஏப்.20) வரை 7 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில், ராஜஸ்தானில் அன்றாட பாதிப்பு 6,200 என்று பதிவாகியுள்ளது. அங்கு நளை முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. கடந்த மாதம் தொற்று பாதிப்பு 2 சதவீதமாக இருந்த நிலையில், இந்த மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT