Published : 06 Dec 2015 03:03 PM
Last Updated : 06 Dec 2015 03:03 PM
சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களை மீட்க வேண்டி பல்வேறு வெளிநாடுகளின் தூதரகங்களில் இருந்து என்டிஆர்எப் தலைமையகத்துக்குகு தொடர்ந்து தொலைபேசிகள் வருவதாகக் கூறப்படுகிறது.
பல வெளிநாடுகளின் கல்வி மற்றும் தொழில்முறை செயல்பாடுகளின் முக்கியமான நகரமாக சென்னை உள்ளது. இங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு பல வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருவது வழக்கம். இத்துடன் சென்னையின் பல சிறந்த தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வு உட்படப் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர் மற்றும் மாணவர்களும் வருவது உண்டு.
இப்படி வந்தவர்களில் பலர் சென்னையின் வெள்ளத்தில் சிக்கி விட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களின் தொலைபேசிகளும் செயல்படாமல் போன காரணத்தால் அவர்கள் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் தம் உறவுகளைத் தேடி டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களை அணுகியுள்ளனர். இதற்காக, அந்த தூதரக அதிகாரிகள் மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டதுடன், சென்னையின் மீட்புப் பணியில் இறங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரையும் நேரடியாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் என்.டி.ஆர்.எப் தலைமையகத்தின் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ''பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற உதவும்படியும் எங்களுக்கு தொலைபேசிகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகவும் அமெரிக்கா உட்பட சில வெளிநாட்டு தூதரகங்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளன. இவர்களையும் மீட்பதற்காக எங்கள் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என தெரிவித்தனர்.
டெல்லி, உபி, பஞ்சாப், மகராஷ்டிரா உட்படப் பல்வேறு இடங்களில் இருந்து சென்றுள்ள என்டிஆர்எப் படைகளுக்கு தலைமை ஏற்று அதன் செயல்பாடுகள் பிரிவு டிஐஜியான எஸ்.எஸ்.புலேரியா சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது கைப்பேசி எண் ஒரு ஆங்கில செய்தி சேனலில் ‘என்.டி.ஆர்.எப் அவசர உதவி எண்’ என நேற்று முன் தினம் வெளியிடப்பட்டு விட்டது. இதனால், புலேரியாவிற்கு இரவு முழுவதிலும் பல வெளிநாடுகளில் இருந்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து தொடர்பு கொண்டபடி இருந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT