Published : 14 Apr 2021 12:24 PM
Last Updated : 14 Apr 2021 12:24 PM
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யலாமா அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் இன்று நண்பகலுக்கு மேல் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்த இறுதி முடிவு தெரியவரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 1.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதி, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இதே கோரிக்கையை வைத்திருந்தனர்.
ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் சார்பில் அதிகாரிகள் தெரிவிக்கையில், “தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத தேர்வு மையங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும். அதேசமயம், கரோனா வைரஸ் பரவல் தீவிரமானால், தேர்வுகளை ஒத்திவைக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படவும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தனர்.
மேலும், செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களில் குடும்பத்தினர் யாரேனும் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்தக் குறிப்பிட்ட மாணவருக்கு மட்டும் தனியாக செய்முறைத் தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால், பொதுத்தேர்வில் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுமா என்பதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
முதல்வர் கேஜ்ரிவால் இன்று அளித்த பேட்டியில், “டெல்லியில் 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதுகிறார்கள். ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்வு மையங்கள் இருக்கும் இடம் கரோனா ஹாட் ஸ்பாட் மையத்தில் இருக்கின்றன.
மாணவர்களின் உடல்நலமும், உயிரும் முக்கியம். தயவுசெய்து சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். பல நாடுகள் தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. அதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கையாண்டுள்ளன. ஆன்லைனில் தேர்வு நடத்துகின்றன” எனத் தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
இந்தச் சூழலில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று நண்பகலுக்கு மேல் பிரதமர் மோடி தலைமையில் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுமா அல்லது தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT