Published : 13 Apr 2021 01:38 PM
Last Updated : 13 Apr 2021 01:38 PM

இந்திய பல்கலைக்கழக சங்க 95-வது ஆண்டுக் கூட்டம்: பிரதமர் மோடி நாளை பங்கேற்பு

புதுடெல்லி

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

நாட்டின் உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது 95வது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு ஏப்ரல் 14-15ம் தேதிகளில் நடத்துகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், வருங்காலத்துக்கான திட்ட நடவடிக்கைகளை வரையறுக்கும் நிகழ்வாக இந்தக் கூட்டம் உள்ளது.

மண்டல அளவில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டங்களின் பரிந்துரைகளை மற்றும் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆலோசனைகளை தெரிவிக்கும் தளமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது.

டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்களால் 1925ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 96வது நிறுவன தினத்தை இந்தக் கூட்டம் கொண்டாடுகிறது.

இந்தியாவின் உயர்கல்வியை மாற்றும் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ அமல்படுத்துவது பற்றிய துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கமும் இந்தக் கூட்டத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்களின் நலனுக்கான கொள்கையை, திறம்பட செயல்படுத்துவதற்கான தெளிவான செயல் திட்டத்துடன், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை-2020 உத்திகளை அமல்படுத்துவதை, இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14ம் தேதி அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பிஆர் அம்பேத்கர் தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர் வெளியிடுகிறார். குஜராத் ஆளுநர், முதல்வர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர். அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x